திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள சேரன்மகாதேவி என்னும் பேரூராட்சியல் அமைந்துள்ள என் அப்பா வழி குலதெய்வமான சாஸ்தா கோவிலுக்கு நாங்கள் குடும்பத்துடன் ஆண்டுத்தோறும் ஜீன், ஜீலை மாதத்தில் செல்வது வழக்கம். அந்த மாதங்களில் எங்கள் பூசாரி காலில் சக்கரம் கட்டிக் கொண்டு தான் ஊரைச் சுற்றி வருவார். பொதுவாக சாஸ்தா கோவில்களில் பங்குனி உத்தரம் பொங்கலுக்கு தான் கூட்டம் அதிகமாக இருக்கும் அன்று கூட பொறுமையாக இருக்கும் மனுஷன் ஜீன், ஜீலை என்றால் கையில் பிடிப்பதே அரிது. காரணம், அவர் சேரமாதேவி அரசு பள்ளியில் வாட்சுமேனாக பணியாற்றுகிறார். இந்த இரண்டு மாதங்களில் வாட்சுமேன், பூசாரி என்ற பொறுப்புகள் மட்டுமல்லாமல் பள்ளி ஆள் பிடிக்கும் வேலையும் அவருக்கு சேர்ந்துக் கொள்ளும். அவரும் இன்னும் இரண்டு ஆசிரியர்களும் சேர்ந்து இரண்டு டி.வி.எஸ் 50 ல் ஊரையே சுற்றி வந்து பள்ளிக்கூடத்திற்கு ஆள் திரட்டுவார்கள்(அவர்கள் தெரு தெருவாகச் சுற்றிவதை நானே நேரில் பார்த்திருக்கிறேன்). 2011 கணக்கெடுப்பில் 82.5 சதவிகிதம் கல்வி அறிவு கொண்ட மாவட்டத்தில் உள்ள பள்ளிக்கு ஆள் திரட்ட இத்தனைப்பாடு.
மேலும் நாம் இன்று பெற்றுக்
கொண்டிருக்கும் கல்வியின் தரம் குறித்து மறு ஆய்வு செய்ய வேண்டிய நிலையிலேயே உள்ளோம்.
குறிப்பாக உயர் கல்வியின் நிலைக்குறித்து சீரிய மறு ஆய்வுத் தேவைப்படுகிறது. தற்போதைய
நிலைமையில் கலைக் கல்வியை இந்தியாவில் ஒருக் கூட்டாகச் சேர்ந்து அழித்துக் கொண்டிருக்கிறோம்
என்பதே என் எண்ணம். பள்ளி கல்வியிலும் கூட நாம் கடந்த இருபது ஆண்டுகளில் பேசிக்கொள்ளும்
படி எந்த சாதனையையும் செய்து விடவில்லை என்றே தோன்றுகிறது. ஆனால் நாம் புள்ளி விவரங்களை
கணக்கில் கொண்டே நம்மை மார்த்தட்டிக் கொள்கிறோம். ஆனால் இத்தகைய புள்ளி விவரங்களுக்கும்
கல்வியின் உண்மையான கல நிலவரத்திற்கும் எட்டாத அளவில் வேறுப்பாடு உண்டு. உதாரணத்திற்கு
வெறும் கல்வி அறிவு பெற்றவர்களின் எண்ணிக்கையை கூட்டிக் கொண்டே செல்வதால் மட்டும் நம்
தரம் உயர்ந்துக் கொண்டே செல்லும் என்ற கனிப்பு காலாவதியாகிப் போன ஒன்று. சுதந்திரத்திற்கு
பின் உள்ள காலங்களில் அனைவருக்குமான கல்வியின் தேவை நம்மிடமிருந்தது. கல்விக்கான தேவையை
ஒவ்வொருரிடமும் எடுத்துச் சென்று அவர்களை கல்வி நிலையங்களுக்கு அழைத்து வர வேண்டிய
கட்டாயத்தில் நாமிருந்தக் காலக்கட்டம் அதனை 70 வருடங்களுக்கு மேலும் பற்றிக் கொண்டிருப்பது
நம்மிடமுள்ள அறியாமையின் வெளிப்பாடே. நம்மிடமுள்ள டேட்டாவை புறந்தள்ளிவிட்டு எதார்த்த
நிலையை யோசிக்கத் தொடங்கினால் மட்டுமே நம் கல்வியின் மறுமலர்ச்சி என்பது சாத்தியம்.
இத்தகைய சூழலில் நம் கல்வியின்
வரலாற்றையையும் ஒரு முறை திரும்பிப் பார்க்க வேண்டிய அவசியம் நம்மிடம் இருக்கிறது.
அத்தருணத்தில் நாம் அனைவரும் கட்டாயம் வாசித்து அறிய வேண்டிய புத்தகம் தான் தரம்பாலின்,
“அழகிய
மரம் – 18 ஆம் நூற்றாண்டு இந்தியாவில் பாரம்பரியக் கல்வி” தமிழில் B.R.மகாதேவன், மிக
முக்கிய ஒன்றாகிறது.


18 ஆம் நூற்றாண்டு என்பது இந்திய
கல்வி வரலாற்றில் மிக முக்கிய காலக்கட்டம். 18 ஆம் நூற்றாண்டி ஆரம்பத்தில் இந்தியாவின்
பிரிட்டிஷ் கவர்னராக தாமஸ் மன்ரோ எழுதிய சுற்றறிக்கை(ஜீன் 25, 1822) ஒவ்வொரு வருவாய்த்துறைக்
கலெக்டருக்கும் அனுப்பப்படுகிறது. அதில் கேட்டுக் கொண்டுள்ளப்படி இந்திய பாரம்பரியக்
கல்வியின் அப்போதைய நிலவரம் குறித்த அனைத்து விதமான தகவல்களும் ஒவ்வொரு வருவாய்த் துறை
ஆட்சியரும் சேகரித்து அனுப்புமாறுக் கேட்டுக் கொள்ளப்படுகிறது (பார்க்க: பின்னினைப்பு
A - I).
இந்த புத்தக்கத்தின் மிகவும்
சுவாரசியமான பகுதிகளில் ஒன்று சர் தாமஸ் மன்ரோவிற்கு ஒவ்வொரு வருவாய்த்துறை ஆட்சியர்களும்
எழுதிய மறுமொழியும், அறிக்கையும் தான் (பார்க்க: பின்னினைப்பு A முழுவதும்).
மிகக் குறிப்பாக கனரா பகுதியின்
ஆட்சியர், கடிதம் வந்த இரண்டே மாதங்களில் மறுமொழியாக எந்த வித கலப்பணிகளுமின்றி, தன்
யூகத்தின் பேரிலேயே இந்த மாகாணத்தில் சொல்லிக் கொள்ளும் படி சிறப்பாக கல்வி இல்லை என்று
முடித்துவிடுகிறார். ஒரு படி மேலே சென்று இந்த பிராந்தியத்தில் எந்த விதமான கல்லூரிகளும்,
பள்ளிகளும், ஆசிரியர்களும் இல்லை என்று ஒரேயடியாகச் சொல்லிவிடுகிறார். இவை முழுக்க
முழுக்க தவறான தகவல் என்று மற்ற அறிக்கைகளை படிக்கும் போதே நம்மால் யூகிக்கக் முடியும்.
மேலும் மற்ற தகவல்களை முழுவதுமாக சேகரித்து அனுப்பிய மற்ற மாகாண கலெக்டர்கள் கூட தங்கள்
கடிதத்தில் ஒரு வித் பிரிட்டிஷ் தன்மையையே காட்டுகின்றனர்.
![]() |
| தாமஸ் மன்ரோ |
ஒட்டுமொத்தமாக
எல்லா கலெக்டர்களின் எண்ணமும் இந்தியாவில் பாரம்பரிய கல்வி என்பது கல்விக்கான் முழு
போதாமைகளுடன் பெயரளவில் செயல்பட்ட ஒன்றாகவே கருதப்பட்டுவந்திருக்கிறது.
ஓரளவேனும் எதிர்க்கும் தன்மையில்
எழுதப்பட்ட சாமுத்திரி ராஜா கடிதத்தில் கூட ஒரு வித மன்றாடலே கூடி நிற்கிறது (பின்னினைப்பு
A – XXI). ஆனால் இந்த கடிதத்தை வாசிக்கும் போது நம் ஒட்டுமொத்த இந்திய கல்வியின் வரலாற்றுச்
சித்திரம் ஒன்று நம்முள் உருவாவதைக் காணலாம்.
இங்கே நிலையான பள்ளிக் கூடம்
இல்லாத கோவில்கள், மசூதிகள், தர்மஸ்தலங்கள், வீடுகளிலேயே கல்வி பயின்று வரப்பட்டிருக்கிறது.
மேலும் ஆசிரியர்களுக்கு மாணவர்களின் கல்விக்கான தொகையை பணமாக மட்டுமல்லாமல் நில மாணியமாக,
அவர் தங்கும் இடமாக அரிசி, பருப்புப் போன்ற தேவையான உணவு வகைகளாகத் தரப்பட்டிருக்கிறது.
மாணவர்களின் பெற்றோர்கள் மட்டுமல்லாமல் அரசாங்கத்தாலும் கல்விக்கான மாணியங்கள் தரப்பட்டுள்ளன.
இந்த மாணியங்கள் எல்லாம் பிரிட்டிஷ்
அரசாங்கத்தால் நில வரிப் போன்ற வெவ்வேறு வரிகள் மூலமாகவும், முந்தைய அரசால் பணமாக வந்த
மாணியங்கள் சிலவற்றை நிறுத்தியும் (இவை நம் நாட்டின் அமைப்பு பற்றிய பிரக்ஞை இல்லாமல்
செய்யப்பட்டவையாகக் கூட இருக்கலாம்) நம் கல்வியின் வீழ்ச்சிக்கு வித்திட்டுள்ளனர்.
அதன் பின் இங்கே பல பள்ளி,
கல்லூரிகளை நிறுவிய போதிலும் அவை நம்மால் அனுகுவதற்கு போதிய பொருள் வசதி இல்லாமலே இருந்திருக்கிறது.
வெறும் ஒற்றை ஆசிரியருக்கான
செலவை பயலும் மாணவர்களினால் பகிரப்பட்டு (ஆசிரியருக்கு கிடைக்கும் அனைத்து மாணியங்களும்
போக மாணவர்களுக்கான செலவு சொர்ப்பமே) வந்த நிலை மாறி இங்கே பள்ளிகள் அமைந்து அதின்
அனைத்து ஆசிரியர்கள், நிர்வாகிகள், செயலர்கள் என அனைவருக்குமான பொருட் செலவு மாணவனிடம்
தினிக்கப்பட்டப் போது அவை ஒரு பெரும் பாரமாக மாறி மாணவர்களுக்கு கல்வி என்பது எட்டாக்
கனி என்னும் நிலையே உருவானது.
இதனை முன் வைத்தே மாகாத்மா
காந்தி சாந்தோம் ஹவுலில் ஆற்றிய உரை மிகவும் முக்கியத்துவம் பெருகிறது. பின்னினைப்பு
F ஆக வந்திருக்கும் மகாத்மா காந்தி மற்றும்
சர் பிலிப் ஹெக்டாக்கும் மான கடித உரையாடல் எந்த ஒரு புனைவையும் மிஞ்சும் சுவாரஸ்ய
தன்மைக் கொண்டவை. நம்மை உலுக்கிப் போடும் பல வித சுவாரஸ்ய பார்வை அதனுள் புதைந்திருப்பவை.
“இந்தியாவின் இப்போதைய கல்வி நிலை முந்தைய ஐம்பது அல்லது நூறு வருடங்களுக்கு முந்தைய கல்வி நிலையைவிட மிகவும் மோசமாக இருக்கிறது. பர்மாவிலும் இதே நிலைதான். ஏனென்றால் பிரிட்டிஷ் நிர்வாகிகள் இந்தியாவுக்கு வந்தபோது இங்கு நிலவிய அமைப்புகளைப் புரிந்துகொண்டு அதனை வளர்த்தெடுப்பதற்குப் பதிலாக அவற்றை அப்புறப்படுத்தத் தொடங்கினார்கள்.” என்று சாந்தோம் ஹவுசில் மகாத்மா காந்தி ஆற்றிய உரை ஏற்படுத்திய பெரு அதிர்வலையின் தொடர்ச்சியாக இந்தக் கடிதப்பரிமாற்றம் நிகழ்கின்றன. ஆனால் அவற்றில் சுட்டப்படும் ஒவ்வொரு தகவல்களும் எந்த வித யோசனையும், ஆராயும் திறனுமின்றி ஹெக்டாக்கால் எங்கனம் மறுக்கப்படுகிறது என நாம் இன்று வாசிக்கும் போது நம்முள் ஒரு வித அமைதி இழப்பை உண்டாக்குகிறது.
இதில் நமக்கு கிடைக்கும் மிக
சுவாரஸ்மான தகவல் என்னவென்றால் இந்தியாவின் 18 ஆம் நூற்றாண்டிற்கு முந்தைய கல்வி நிலை
உலகிலுள்ள வேறெந்த நாடுகளை விடவும் சற்று மேலாகவே இருந்திருக்கிறது. உதாரணத்திற்கு
பிரிட்டனில் கூட ஒரு மாணவருக்கு சராசரியாக ஒன்று அல்லது இரண்டு ஆண்டுகள் மட்டுமே கல்வி
தரப்பட்டுள்ளன. பிரட்டனில் உள்ள மிகப்பெரிய பல்கலைக்கழகங்களான ஆக்ஸ்போர்ட், ஏடின்பேர்க்
போன்றவை முன்னரே செயல்பட்டு வந்தாலும் அவை மேட்டுக்குடியினருக்கான கல்வி நிலையமாகவே
நெடுங்காலம் திகழ்ந்திருக்கிறது. 18, 19 நூற்றாண்டுகளிலேயே இங்கே அனைவருக்குமான கல்வி
பற்றிய பிரக்ஞை எழுந்து சவந்த் டே (ஞாயிறு மட்டுமேயான கல்வி நிலையங்கள்), கடை நிலையினருக்கான
கல்வி நிலையங்கள் எனத் தொடங்கியிருக்கின்றன.
மாறாக இந்தியாவில் அனைத்து
ஜாதிகளுக்குமான ஆரம்பக் கல்வி இங்கே இருந்திருக்கிறது (ஆனால் வரலாறு நம்மிடம் திரிந்து
பிராமணர்கள் மற்றும் சத்திரியர்கள் மட்டுமே இங்கே கல்வியை ஆக்கிரமித்ததாக நம்மிடம்
புனைப்பட்டுள்ளது). அனைத்து ஜாதிக்குமான கல்வி இங்கே இருந்திருக்கிறது இதனை உணர்த்தும்
விதமாக தாமஸ் மன்ரோவின் ஆட்சியில் சேகரித்த தகவல்களில் மிகவும் துள்ளியமாகக் காட்டப்படுகிற்து.
பிராமணர்களை விட பத்து, இருபது மடங்கு அதிகமாக சூத்திர ஜாதியினர் இங்கே கல்வி பயின்றுள்ளனர்.
உயர்க்கல்வி மட்டுமே இங்கே பிராமணர்களால் அதிகம் பயலப்பட்டத்தற்கு காரணம் மற்ற ஜாதியினர்
ஆரம்பக் கல்விக்கு பின்னர் தங்கள் குலத் தொழிலில் தேர்ச்சி பெற முனைந்துள்ளனர். பிராமணர்களுக்கு
மட்டுமே நியாய சாஸ்திரம், வேதம் போன்றவற்றிள் உயர்க்கல்வியின் தேவை இருந்திருக்கிறது.
இங்கே இவை ஜாதி பாகுப்பாட்டில் இயங்கவில்லை என்பதற்கு உதாரணமாக இங்கே மருத்துவம் பிராமண,
சத்திரிய அல்லாத ஜாதிகளில் மட்டுமே உயர்க்கல்வியில் பயிற்றுவிக்கப்பட்டிருக்கிறது.
மேலும் எந்த மேலை நாட்டிற்கும்
இணையாக இங்கே கணிதம், வானவியல், இயற்பியல், ஒழுக்கவியல், புராதன வரலாறு, இலக்கணம்,
சொல்லாட்சிக் கலை, தத்துவம், தர்க்கவியல், உடலியல், இசை, தாவரவியல், கவிதை, பொதுச்
சட்டம், மருத்துவக் கல்வி, வேதியியல் என பல துறைகளில் கல்வி பயிற்றுவிக்கப்பட்டிருக்கிறது.
இவை அனைத்தும் ஒரு சில அதிகாரிகளின் முன் முடிவுகளாலும், ஆய்வற்ற கற்பனைகளாலும் நிறுத்த/மாற்றியமைக்கப்பட்டதனால்
அவை அந்த பாரம்பரியத்தின் வீழ்ச்சிக்கு வித்திட்டதைக் காணலாம்.
![]() |
| இந்திய பாரம்பரிய கல்வி நிலையம் |
இங்கே நான் முன் முடிவுகள்
அல்லது ஆய்வற்ற கற்பனை எனக் கூறக் காரணமான கடிதங்கள்/கட்டுரைகள் பின்னினைப்பு D மற்றும்
Eல் உள்ள பஞ்சாப் பாரம்பரியக் கல்விக் குறித்து ஜி.டபிள்யூ. லெய்ட்னரின் கருத்துகளையும்,
டபிள்யூ. ஆடமின் ஆய்வையும் சொல்லலாம். இவை மகாத்மா காந்தி சொல்வது போல் மண்ணைத் தோண்டி
வேரை எடுத்து ஆராய்ந்து, அதனை அப்படியே மட்கி விட செய்யும் யோசனைகள்.
இவற்றை பின்னாளில் பிரிட்டிஷிலிருந்து
குரலாக எட்வர்டு தாம்சன் இத்தகைய சோதனை முயற்சிகளின் தோல்விகளையும், அவை இந்திய கல்வி
முறையில் ஏற்படுத்திய அழிவுகளை தனக்கு கிடைத்த தரவுகளின் மூலம் முன் வைக்கிறார் (பார்க்க
பின்னினைப்பு F – காந்தி மற்றும் ஹெக்டாக் உடனான கடித உரையாடல்களில்). இதனை உறுதி செய்யும்
விதமாகவே பஞ்சாப் கல்வியின் வீழ்ச்சிக் குறித்து கே.டி. ஷா மற்றும் மகாதேவ தேசாய் அவர்களும்
காந்தி கேட்டுக் கொண்டதன் பெயரில் தரவுகளை முன் வைக்கின்றனர். ஆனால் அவை அனைத்தையும்
போதுமான தகவல்கள் இல்லை என்ற ஒற்றை கூற்றின் மூலமே ஹெக்டாக் விலகிச் செல்கிறார். ஆனால்
அந்த தகவல்கள் கிடைத்த காலக்கட்டத்தில் உலகின் பிற பகுதியில் இந்த அளவிற்கு கூட தகவல்
கிடைக்கவில்லை என எட்வர்டு தாம்சன் எடுத்துரைத்தும் பயனில்லாமலே போகிறது.
இத்தகைய பல திரிபுகளினாலும்,
மாற்றங்களினாலும் நம் கல்விக்கு ஏற்பட்ட வீழ்ச்சியையும், அதற்கான போதுமான தரவுகளையும்
மிகுந்த சிரத்தையோடு சேகரித்து எழுதப்பட்ட நாவல் அழகிய மரம்.
இத்தனை தகவல் களஞ்சியத்தின்
நடுவில் எனக்கு வியப்பைத் தரக்கூடி ஒரு சிறு தகவல் என்னவெனில் கோயம்புத்தூர் மாகாண
கலெக்டர் அவர்கள் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல், தமிழ்நாட்டிலுள்ள இந்த மாகாணத்தில்
கிராந்தம், ஹிந்தி, தமிழ், தெலுங்கு, கன்னடம், பாரசீகம் என பல மொழி பாரம்பரியப் பள்ளிகள்
இருந்துள்ளன. இன்று வரலாற்று பிரக்ஞை சிறிதளவுமின்றி தனி தமிழ், தமிழ் முதன்மை எனக்
கூச்சலிடுப்பவர்களுக்கான தகவலாய் தெரிகிறது (நிற்க நான் இங்கே பேச நினைப்பது பிற மொழி
தினைப்பையோ அல்லது அதற்கான எதிர்ப்பையோ பற்றி அல்ல மாற்றாக இங்கே அனைத்து விதமான மொழி
வழிக் கல்விக்கான வாய்ப்பையும், அதற்கான தேவையையுமே நான் கூற விரும்பினேன்). இதனையே B.R.மகாதேவன்
தன் முன்னுரையிலும் குறிப்பிடுகிறார்.
மற்றொரு சுவாரஸ்மான அம்சம்
இந்நூலை வடிவமைத்த விதம். பொதுவாக நூலில் பின்னினைப்பாக வருவன அனைத்தும் தகவலுக்கான
இடமாக மட்டுமே இருக்கும். ஆனால் இந்நூலின் பின்னினைப்பைத் தவறவிடுபவர்கள் இந்நூலின்
மொத்த நோக்கத்தையுமே இழந்தவர்களாவார்கள். மொத்தம் பின்னினைப்பின் சாராம்சம் மட்டுமே
முதலிலுள்ள 120 பக்கங்கள். அதன் பின் பின்னினைப்பே நம்மை அதன் தகவல் சுவாரஸ்யத்தாலும்,
கடிதங்களாலும் கடத்திச் செல்லும்.
காந்தியவாதியான தரம்பால் இந்நூலுக்காக
பல அருந்தகவல்களை சேகரிக்க பல நூற்றாண்டுகளாக கலப்பணியில் இருந்துள்ளார். அவர் தகவல்களுக்காக
பிரிட்டிஷ் அருங்காட்சியகத்திலும், இந்திய சேவா கிராமத்திலும் தங்கி ஆவணங்களைச் சேகரித்துள்ளார்.
மேலும் இதனை தமிழில் மொழி பெயர்த்த
B.R.மகாதேவனின் பணியையும் நாம் எளிதில் விலக்கி விட முடியாது. நான் வாசித்த மொழிபெயர்ப்பு
நூல்களுள் தலைசிறந்த மொழிபெயர்ப்பு என ஐயமின்றி சொல்லலாம்.
ஒரு பண்பாட்டு வரலாற்றின் கல்வி
மொத்த தகவலகளும் ஒரே புத்தகத்தில் குவிந்து ஓர் களஞ்சியமாக நம்மிடம் கிடைத்திருப்பது
நம் அதிர்ஷ்டமே. இதனை நம் இந்திய வரலாற்றின் மீது எந்த விதமான முன்முடிவுகளோடு வாசிக்கத்
தொடங்கும் வாசகற்கும் அவரது கோணத்தை மாற்றி அமைக்கும் தகவல்கள் உள்ள உள்ளதென எந்த வித
மாற்றுக் கருத்துமின்றி சொல்வேன்.
நன்றி,
ஜி.எஸ்.எஸ்.வி.




No comments:
Post a Comment